ஐபிஎல்லில் எந்த அணியும் எடுக்காததற்காக செம சந்தோஷப்படும் புஜாரா..! போங்கடா நீங்களும் உங்க ஐபிஎல்லும்
ஐபிஎல்லில் எந்த அணியும் தன்னை ஏலத்தில் எடுக்காததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் புஜாரா.

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரரான புஜாரா, இந்தியாவிற்காக 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6713 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் புஜாரா.
இந்திய டெஸ்ட் அணியின் மேட்ச் வின்னராகவும் நட்சத்திர வீரராகவும் ஜொலித்துவந்த புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த நிலையில், கடைசியாக இலங்கைக்கு எதிராக இந்தியா ஆடிய டெஸ்ட் தொடரில் புஜாரா அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய புஜாரா, அதன்பின்னர் இந்தியாவிற்காக ஆடவில்லை. இதற்கிடையே நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வழக்கம்போலவே, டெஸ்ட் வீரர் என்பதால் புஜாராவை எந்த அணியும் எடுக்கவில்லை. ஆனாலும் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக ஆடிய புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதம், இரட்டை சதம் என பெரிய இன்னிங்ஸ்களை ஆடி ஸ்கோரை குவித்தார்.
கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடியதன் விளைவாக இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி ஆடவுள்ள ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் புஜாரா மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் தான் புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதில் நன்றாக ஆடியதால் தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அந்தவகையில், ஐபிஎல்லில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது நல்லதுதான் என்று புஜாரா கூறியுள்ளார். ஐபிஎல்லில் கோடிகளில் ஊதியம் கொடுக்கப்படுவதால், அனைத்து வீரர்களும் ஐபிஎல்லில் ஆடத்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் புஜாரா ஐபிஎல்லில் ஆடாதது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய புஜாரா, ஒருவேளை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தால், எனக்கு எப்படியும் ஆடும் லெவனில் இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். வலையில் பயிற்சி மட்டுமே செய்து கொண்டிருந்திருப்பேன். போட்டியில் ஆடுவதற்கும் வலையில் ஆடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்தவகையில் கவுண்டியில் ஆட வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஓகே என்று சொல்லிவிட்டேன். பேட்டிங்கில் மீண்டும் எனது ரிதத்திற்கு வருவதற்காகத்தான் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்புக்கொண்டேன். கவுண்டியில் நான் நன்றாக ஆடியதற்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்திய அணியில் எனக்கு மீண்டும் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புஜாரா கூறினார்.