ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் மிகவும் பரபரப்பாக நடந்துவருகிறது. கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஏலம் நடந்துவருகிறது. 

ஐபிஎல் அணிகளில் ஒவ்வொரு சீசனிலுமே, தேவையில்லாமல்  மற்றும் அவசியத்திற்கு அதிகமாக எந்தவித மாற்றத்தையும் செய்யாத அணிகள் என்றால் அது சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் தான். சும்மா பரபரப்புக்காக அதிகமான விலை கொடுத்து வீரர்களை எடுக்காமல், அணிக்கு என்ன தேவையோ அதற்கேற்ப பட்ஜெட்டில் பர்சேஸிங்கை முடித்துவிடும் வழக்கமுடையது சிஎஸ்கே அணி. 

மற்ற அணிகள் எல்லாம் மேக்ஸ்வெல், கம்மின்ஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்காக அடித்துக்கொண்டு அதிகமான விலையை கொடுத்து ஏலமெடுத்துவரும் நிலையில், சிஎஸ்கே அணி ஸ்மார்ட்டாக பட்ஜெட்டில் ஒரு நல்ல ஆல்ரவுண்டரை எடுத்துள்ளது. 

பாட் கம்மின்ஸை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கேகேஆர் அணியும் மேக்ஸ்வெல்லை 10 கோடியே 75 லட்சத்திற்கு பஞ்சாப் அணியும் எடுத்துள்ளன. தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை 10 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணி எடுத்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.5 கோடிக்கு எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. சாம் கரனை எடுக்க சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் போட்டியிட்டன. இவரை எடுப்பதில் உறுதியாக இருந்த சிஎஸ்கே அணி, சாம் கரனை ரூ.5.5 கோடிக்கு எடுத்தது.