சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு நிகராக கோலோச்சிய இலங்கை அணி, கடந்த சில ஆண்டுகளாக மோசமாக ஆடிவருகிறது. டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசைகளில் முறையே 6, 7  மற்றும் 8வது இடங்களில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுத்து, சர்வதேச அரங்கில் மீண்டும் கெத்தாக நடைபோட வைக்க, இலங்கை கிரிக்கெட் வாரியம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இலங்கை கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ள ஆல்டைம் சிறந்த வீரர்களான அரவிந்த் டி சில்வா, சங்கக்கரா, முத்தையா முரளிதரன், ரோஷன் மஹனாமா ஆகியோர் அடங்கிய புதிய கமிட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அமைத்தது.

அந்தவகையில், 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக  வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இலங்கை அணிக்கான ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் சமிந்தா வாஸ் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு புறப்படும் முன், இலங்கை அணி சார்பில் அங்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இலங்கை ஃபாஸ்ட் பவுலர் லஹிரு குமாராவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது. இந்நிலையில், இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸுக்கு புறப்படும் சில மணி நேரங்களுக்கு முன், திடீரென பவுலிங் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெஸ்ட் இண்டீஸ் செல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார் வாஸ்.

சமிந்தா வாஸின் செயலால் அதிர்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், கடைசி நேரத்தில் கவுத்துவிட்ட வாஸின் செயல், பொறுப்பற்றது என்று விமர்சித்துள்ளது. இதையடுத்து வாஸ் இலங்கை வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்லவில்லை. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் அந்த அணிக்கும் பெரிய அடி.