வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-1 என டி20 தொடரை வென்றது. நாக்பூரில் நடந்த கடைசி போட்டியில் சாஹல், வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்தினார். 

ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினாலும் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார் சாஹல். மஹ்மதுல்லாவை 8 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் சாஹல். சாஹலின் இந்த விக்கெட், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 50வது விக்கெட். 

தனது 34வது சர்வதேச டி20 போட்டியில் 50வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் சாஹல். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விரைவில் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய பவுலர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார். பும்ரா 41 போட்டிகளிலும் அஷ்வின் 42 போட்டிகளிலும் 50 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினர். அவர்களது சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் சாஹல். 

அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அஜந்தா மெண்டிஸ், இம்ரான் தாஹிர், ரஷீத் கான், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோருக்கு அடுத்தபடியாக விரைவில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளார் சாஹல்.