இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்தது. 5 போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி 5-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி. 

முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்வதை உறுதி செய்துவிட்டதால், கடைசி 2 போட்டிகளில் சில வீரர்களை அணியில் சேர்த்து பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், 4வது போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. கடைசி போட்டியில் கேப்டன் கோலி ஆடவில்லை. கோலி ஆடாததால் கடைசி டி20 போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.

ஆனால் ரோஹித் சர்மா பேட்டிங் ஆடும்போது ஏற்பட்ட காயத்தால், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் களத்திற்கு வந்து கேப்டன்சி செய்ய முடியாமல் போனது. எனவே ரோஹித்தும் கோலியும் களத்தில் இல்லாத சூழலில், ராகுல் கேப்டன்சி செய்தார். 164 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 10வது ஓவரில் மட்டும் 34 ரன்கள் அடித்தது. ஆனாலும் நெருக்கடியான சூழல்களை சமாளித்து நியூசிலாந்தை 156 ரன்களில் சுருட்டி, 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 

Also Read - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனிடம் ராகுல் விடுத்த சுயநல கோரிக்கை

இந்நிலையில், தொடரை வென்ற பின்னர் பேசிய கேப்டன் கோலி, ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டது விரும்பத்தகாத சம்பவம். ஆனால் நானும் ரோஹித்தும் களத்தில் இல்லாத சூழலில், நெருக்கடியான தருணங்களை பசங்க சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார்கள். அழுத்தத்தை எங்கள் வீரர்கள் கையாண்ட விதத்தை களத்திற்கு வெளியே இருந்து பார்க்க சிறப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. இதே முமெண்ட்டத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு நமது வீரர்கள் எடுத்துச்செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தனது வீரர்களை நினைத்து பெருமைப்பட்டதோடு அவர்களை புகழ்ந்து பேசினார்.