IPL 2023: கேமரூன் க்ரீனின் அபார சதத்தால் சன்ரைசர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்த மும்பை அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 201 ரன்கள் என்ற கடின இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கடைசி லீக் போட்டியை ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டது. மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரின், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ருக், நிதிஷ் ரெட்டி, க்ளென் ஃபிலிப்ஸ், சன்வீர் சிங், மயன்க் தாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் ம்ராலிக்.
முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய மயன்க் அகர்வால் மற்றும் விவ்ராந்த் சர்மா ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 140 ரன்களை குவித்தனர். விவ்ராந்த் சர்மா 47 பந்தில் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 46 பந்தில் 83 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபிலிப்ஸ்(1), ஹாரி ப்ரூக்(0) ஆகியோர் ஏமாற்றமளித்ததால் டெத் ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஸ்கோர் செய்யவில்லை. ஆனாலும் மயன்க் அகர்வால் - விவ்ராந்த் சர்மா அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கத்தால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி.
201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவும் கேமரூன் க்ரீனும் இணைந்து அடித்து ஆடினர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ச்சியாக சிறப்பாக பேட்டிங் ஆடி சன்ரைசர்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய கேமரூன் க்ரீன் சதமடித்தார். 47 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 18வது ஓவரிலேயே 201 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை அணி.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது மும்பை அணி. இரவு நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். ஆர்சிபி தோற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.