இந்தியாவின் 360 வீரர் என்றழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ். ஏபி டிவில்லியர்ஸை போலவே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய திறமை பெற்ற சூர்யகுமார் யாதவ், எந்தவிதமான சூழலுக்கேற்றவாறும் ஆடக்கூடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 3 சீசன்களில் மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவருவதுடன், உள்நாட்டு போட்டிகளிலும் அபாரமாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். தொடர்ச்சியாக அவர் சிறப்பாக ஆடிவரும் போதிலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருகிறது. ஐபிஎல் 13வது சீசனில் மிகச்சிறப்பாக ஆடியும் கூட, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சூர்யகுமார் குறித்து பேசிய பிரயன் லாரா, சூர்யகுமார் செம க்ளாஸ் பிளேயர். நான் ஒரு வீரர் செய்யும் ஸ்கோரை வைத்து அவரது தரத்தை மதிப்பிடுபவன் அல்ல. அவர்களின் டெக்னிக், அழுத்தத்தை கையாளும் விதம், அவர்களின் பேட்டிங் ஆர்டர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த வீரர் எப்படி ஆடுகிறார் என்பதை மதிப்பிடுபவன். அப்படி பார்க்கும்போது சூர்யகுமார் யாதவ் சூப்பர் பேட்ஸ்மேன். அவர் மும்பை அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார்.

3ம் வரிசை என்பது மிக முக்கியமான பேட்டிங் வரிசை. அந்த வரிசையில் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் தான் இறக்கப்படுவார். அந்தவகையில், ரோஹித் மற்றும் டி காக் ஆரம்பத்திலேயே அவுட்டான எத்தனையோ போட்டிகளில் சூர்யகுமார் சிறப்பாக ஆடி அணியை கரைசேர்த்திருக்கிறார். அவரை ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று லாரா கருத்து தெரிவித்துள்ளார்.