தோனிக்காக, தான் உருவாக்கியுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவிற்கான டீசரை வெளியிட்டுள்ளார் பிராவோ.

தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த சில பொக்கிஷங்களில் ஒருவர். இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். 

ஐபிஎல்லில் அவர் கேப்டனாக இருக்கும் சிஎஸ்கே அணிக்கு 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்தவர் கேப்டன் தோனி. தான் தலைமை தாங்கும் அனைத்து அணிகளுக்கும் வெற்றிகளை குவித்து கொடுத்தவர் தோனி. ஐபிஎல்லில் தோனியின் தலைமையில் ஆடிய வெளிநாட்டு வீரர்கள் அவரது கேப்டன்சி திறமையாலும், கூலான அணுகுமுறையாலும் ஈர்க்கப்பட்டு, அவரது ரசிகர்களாகியுள்ளனர். 

அந்தவகையில், தோனியுடன் நெருக்கமான நட்பு கொண்ட பிராவோ, அவரது ரசிகரும் கூட. சிஎஸ்கே அணி இக்கட்டான நிலையில் இருந்த பல போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துவகையிலும் சிறந்த பங்களிப்பை அளித்து சிஎஸ்கேவிற்கு த்ரில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். இக்கட்டான சூழல்களில் பிராவோவை நம்பி தோனி பலமுறை பந்தை கொடுத்திருக்கிறார். தோனி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை, காப்பாற்றும் வகையில் பிராவோவும் சிறப்பாக செயல்பட்டு அசத்திவிடுவார். 

தோனியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவராக திகழும் பிராவோ, தோனியின் பிறந்தநாளுக்காக, அவரது பெருமைகளை பறைசாற்றும் வகையில், தோனிக்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் பிராவோ. தோனிக்கு வரும் ஜூலை 7ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி, அவருக்காக ஒரு பாடலை உருவாக்கிய பிராவோ, தோனியின் ஜெர்சி நம்பரான நம்பர் 7 என்ற பெயரிலேயே உருவாக்கியுள்ளார். அதன் டீசரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தோனி ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.