கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் அணியை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் சுற்றில் செயிண்ட் கிட்ஸ்&நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணியும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும், முதல் தகுதிச்சுற்றில் தோற்ற ட்ரைடண்ட்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி வரும் 10ம் தேதி நடக்கவுள்ளது. 

எலிமினேட்டர் சுற்றில் பாட்ரியாட்ஸ் அணிக்கும் நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாட்ரியாட்ஸ் அணியை வெறும் 125 ரன்களுக்கு சுருட்டியது நைட் ரைடர்ஸ் அணி. 126 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சற்று மந்தமாக ஆட, கடைசி நேரத்தில் பொல்லார்டு அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 26 ரன்களை விளாசி 19வது ஓவரில் நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இந்த போட்டியில் நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர் சிம்மன்ஸ் மற்றும் பாட்ரியாட்ஸ் கேப்டன் கார்லஸ் பிராத்வெயிட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது சிம்மன்ஸும் தினேஷ் ராம்தினும் பேட்டிங் ஆடிய சமயத்தில், ஃபேபியன் ஆலன் வீசிய 8வது ஓவரில் ஒரு பந்தை ராம்தின் அடித்துவிட்டு, ராம்தினும் சிம்மன்ஸும் சிங்கிள் ஓடினர். 

சிங்கிள் ஓடிமுடித்துவிட்டு, ஆலோசனை செய்வதற்காக இருவரும் கிரீஸை விட்டு வந்தனர். அந்த சமயத்தில் பாட்ரியாட்ஸ் கேப்டன் பிராத்வெயிட், பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்துவிட்டு ரன் அவுட்டுக்கு அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து பிராத்வெயிட், சிம்மன்ஸை சீண்ட, இருவருக்கும் இடையே வார்த்தைப்போர் வெடித்தது. பிராத்வெயிட் ஆக்ரோஷமாக சிம்மன்ஸை திட்ட, சிம்மன்ஸும் முண்டிக்கொண்டு வந்தார். ஆனால் கள நடுவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி அனுப்பிவைத்தனர். அந்த வீடியோ இதோ...