இந்தியாவின் இளம் வீரரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரருமான பிரித்வி ஷா, சச்சினும் லாராவும் கலந்த கலவை என பிராட் ஹாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

அபரிமிதமான பேட்டிங் திறமையை கொண்ட இந்தியாவின் இளம் வீரர் பிரித்வி ஷா. 2018ம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பிரித்வி ஷா, அந்த ஆண்டே இந்திய சீனியர் அணியிலும் இடம்பிடித்தார். 2018ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா, 2018 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக அந்த தொடரில் முழுமையாக அவரால் ஆடமுடியாமல் போயிற்று. 

மிகவும் இளம் வயதிலேயே முதிர்ச்சியான பேட்டிங்கை மிகத்தெளிவாக ஆடும் அபாரமான திறமை பிரித்வி ஷா. பிரித்வி ஷா இந்தியாவின் அடுத்த டெண்டுல்கராக பார்க்கப்படுகிறார். சர்வதேச அளவில் முன்னாள் ஜாம்பவான்கள் பலராலும் வியந்து பார்க்கப்பட்டதுடன், அவர்களது பாராட்டுகளையும் பெற்றார் பிரித்வி ஷா.

அபாரமான இளம் திறமைசாலியான பிரித்வி ஷா ஐபிஎல்லிலும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடினார். கடந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடி 353 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. இந்த சீசனிலும் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்நிலையில், அவரை சச்சினும் லாராவும் கலந்த கலவை என புகழ்ந்துள்ளார் பிராட் ஹாக். பிரித்வி ஷா குறித்து கருத்து தெரிவித்த பிராட் ஹாக், பிரித்வி ஷா மிகச்சிறந்த திறமைசாலி. நன்றாக ஆடி அதிகமான ரன்களை குவித்து, அவர் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை இந்த உலகிற்கு பறைசாற்ற இதுவே சரியான தருணம். பிரயன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் கலந்த கலவை பிரித்வி ஷா என்று பிராட் ஹாக் புகழாரம் சூட்டியுள்ளார்.