சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே பயங்கரமாக அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டப்போகிறது. கொரோனாவிற்கு 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி. எனவே உலகம் முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

அனைவருமே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்துவருகிறார்.

அப்போது, ரசிகர் ஒருவர், ஹர்திக் பாண்டியா - பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிராட் ஹாக், ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த திறமைசாலி. தரமான ஆல்ரவுண்டர் தான். ஆனால் பென் ஸ்டோக்ஸுக்கு சவாலளிக்கும் அளவிற்கான சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இன்னும் ஆடவில்லை. எனவே என்னுடைய தேர்வு பென் ஸ்டோக்ஸ் தான் என்று பிராட் ஹாக் பதிலளித்தார்.