விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சாதனைகளை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 279 ரன்கள் அடித்தது. மழை குறுக்கீட்டால் டி.எல்.எஸ் முறைப்படி 46 ஓவர்களில் 270 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 42 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 42வது சதத்தை பதிவு செய்த கோலி, 120 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த போட்டியில் சதமடித்த கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்தார். 

உலக கோப்பையில் 5 அரைசதங்களை அடித்த கோலி, அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. ஆனால் உலக கோப்பைக்கு பின் ஆடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்துவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின்(49 சதங்கள்) அதிக சதங்கள் சாதனையை கோலி விரைவில் முறியடித்துவிடுவார். 

இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த புவனேஷ்வர் குமார், போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோலி குறித்து பேசிய புவனேஷ்வர் குமார், கோலியின் முகபாவம் மற்றும் அவரது உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்தே, அவர் சதமடிப்பதில் எந்தளவிற்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை அறியமுடியும். உலக கோப்பையில் கோலியால் சதமடிக்க முடியாமல் போனதற்கு அவர் ஃபார்மில் இல்லை என்று அர்த்தமில்லை. அவர் 70 - 80 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியதுமே, பிட்ச் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை என்று சொல்லிவிட்டதாக புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.