புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் பிரைம் ஃபாஸ்ட் பவுலர். இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்விங் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமார், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார். 

அவ்வப்போது காயமடைந்துவிடுவதால், அவரால் இந்திய அணியில் தொடர்ச்சியாக ஆட முடிவதில்லை. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு காயம் தான் பிரதான எதிரி என்பது எதார்த்தம். அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆட முடியவில்லை. ஆனால் அவர் எப்போது காயமென்று வெளியேறிவிட்டு, திரும்பி வந்தாலும், அணியில் அவருக்கான இடம் உறுதி. அவரது இடத்தை யாரும் நிரப்பவில்லை என்பதை அதிலிருந்தே அறிந்துகொள்ள முடியும். அந்தளவிற்கு தனது இடத்தை அணியில் தக்கவைத்துள்ளார். 

இந்நிலையில், ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது குறித்து பேசியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, ஃபகார் ஜமானின் அதிரடி சதத்தால்(114) 50 ஓவரில் 338 ரன்களை குவித்தது. இந்திய அணி வெறும் 158 ரன்களுக்கு சுருண்டதால் 180 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான் அணி.

அந்த போட்டியில், ஆரம்பத்திலேயே ஃபகார் ஜமான் அவுட்டாக வேண்டியவர். ஆனால் பும்ராவின் பந்தில் அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அந்த பந்து நோ பாலாகி போக, வாய்ப்பு பெற்ற ஃபகார் ஜமான் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடிவிட்டார். அதை சுட்டிக்காட்டித்தான் புவனேஷ்வர் குமார் பேசியிருக்கிறார். 

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி குறித்து பேசிய புவனேஷ்வர் குமார், அந்த போட்டியில் முதல் 15 நிமிடங்களிலேயே இந்திய அணி 3-4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதுதான் துரதிர்ஷ்டவசமானதாக அமைந்துவிட்டது. ஃபகார் ஜமானுக்கு பும்ரா வீசிய நோ பால் தான் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது. அந்த போட்டி ஒருதலைபட்சமான முடிவை பெற்றது என்றோ நாங்கள் போராடவில்லை என்றோ அர்த்தமல்ல. சில துரதிர்ஷ்டவசமான  சம்பவங்களால் நாங்கள் பலமுறை தோற்றிருக்கிறோம். அதுமாதிரியான சம்பவங்களில் அந்த நோபாலும் ஒன்று என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.