முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. பெங்கால், கர்நாடகா, குஜராத் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

பெங்கால் மற்றும் கர்நாடக அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும் குஜராத் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியிலும் ஆடிவருகின்றன.

பெங்கால் மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது.  டாஸ் வென்ற கர்நாடக அணி, பெங்கால் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியின் டாப் 5 வீரர்களும் சரியாக ஆடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 67 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட பெங்கால் அணியை, அனுஸ்தூப் மஜூம்தர் சிறப்பாக ஆடி சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 

அவருக்கு ஷேபாஸ் அகமது மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து ஆடியதால், மஜூம்தர் சிறப்பாக ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தார். ஆகாஷும் அகமதுவும் சிறப்பாக ஆடினாலும் அவர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க, வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 312 ரன்கள் அடித்தது. மஜூம்தர் 149 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணியில் கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, கருண் நாயர், தேவ்தத் படிக்கல் என முக்கியமான வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் வெறும் 122 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பெங்கால் ஃபாஸ்ட் பவுலர் இஷான் போரெல் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

Also Read - நியூசிலாந்தில் படுமோசமா அசிங்கப்பட்ட கோலி.. முன்னாள் ஜாம்பவான் சொன்ன அதிரடி காரணம்

190 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பெங்கால் அணி, 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 190 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை பெற்ற பெங்கால் அணி, கூடுதலாக, இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் அடித்தாலே போதும். அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்ற வலுவான நிலையில் உள்ளது. கர்நாடக அணியின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.