முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், குஜராத் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன. இதில், கர்நாடகா மற்றும் பெங்கால் அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும், மற்றொரு அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் சவுராஷ்டிரா அணிகளும் மோதின. 

இதில் குஜராத் மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டி கடைசி நாளான இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் பெங்கால் - கர்நாடகா இடையேயான போட்டி நான்காவது நாளே முடிந்துவிட்டது. 

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த பெங்கால் மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அனுஸ்துப் மஜூம்தரின் அபாரமான சதத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களை குவித்தது. மஜூம்தர் 149 ரன்களை குவித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், மனீஷ் பாண்டே, கருண் நாயர் என அனைவருமே சொதப்பியதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 190 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் அடித்தது. எனவே மொத்தமாக 351 ரன்கள் முன்னிலை பெற்றது பெங்கால் அணி. 352 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் கடைசி இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணியின் சீனியர் வீரர்கள் மறுபடியும் சொதப்பினர். கேஎல் ராகுல் வெறும் இரண்டே பந்தில் டக் அவுட்டானார். மனீஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோர் இம்முறையும் ஏமாற்றமளித்தனர். தேவ்தத் படிக்கல் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவருக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்காததால் 7வது விக்கெட்டாக அவரும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து 177 ரன்களுக்கே கர்நாடக அணி சுருந்தது. 

எனவே 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. கேஎல் ராகுல் நல்ல ஃபார்மில் நியூசிலாந்தில் சிறப்பாக ஆடியதால் ரஞ்சி போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சொதப்பியதால் கர்நாடக அணி அரையிறுதியுடன் வெளியேறியது. 

Also Read - ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸின் பெஸ்ட் பிளேயிங் லெவன்

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மஜூம்தர் தேர்வு செய்யப்பட்டார். குஜராத் மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று மாலை முடிந்துவிடும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் பெங்காலை எதிர்கொள்ளும்.