ரஞ்சி தொடரின் இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி, படுமோசமாக ஆடியது. மிகவும் மந்தமாக ரன்னே அடிக்காமல் பேட்டிங் ஆடி நாட்களை கடத்தியது. 

ரஞ்சி இறுதி போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த அணிக்கு கோப்பை வழங்கப்படும். அந்தவகையில், இந்த போட்டி டிராவானாலும் பரவாயில்லை.. ஆனால் முதல் இன்னிங்ஸில் முடிந்தவரை அதிக ரன்களை அடித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆடிய சவுராஷ்டிரா அணி, இரண்டு நாட்கள் முழுவதும் பேட்டிங் ஆடி மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் ஆல் அவுட்டானது. மொத்தமாக 172 ஓவர்கள் பேட்டிங் ஆடிய சவுராஷ்டிரா அணி 425 ரன்கள் மட்டுமே அடித்தது. 

அந்தளவிற்கு படுமந்தமாக பேட்டிங் ஆடினர் அந்த அணி வீரர்கள். குறிப்பாக புஜாராவின் பேட்டிங் படுமோசம். மொத்தமாக 237 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 66 ரன்கள் மட்டுமே அடித்தார் புஜாரா. அர்ப்பித் வசவடா 287 பந்துகளில் 106 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய், பரோட் ஆகியோரும் கூட படுமந்தமாக ஆடினர். 

முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திய சவுராஷ்டிரா அணி, 172 ஓவர்களில் 425 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பெங்கால் அணி, சவுராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் பாணியிலேயே பதிலடி கொடுத்துவருகிறது. முதல் இன்னிங்ஸின் ஸ்கோரை மட்டுமே கருத்தில்கொண்டு, மிகவும் மெதுவாக பேட்டிங் ஆடுகிறது பெங்கால் அணி. 

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களிலும் மனோஜ் திவாரி 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, பெங்கால் அணி, 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னர் சுதிப் சட்டர்ஜியும் ரிதிமான் சஹாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். 

இருவரும் அவசரப்படாமல் மிகவும் நிதானமாக ஆடி ஸ்கோர் செய்துவருகின்றனர். இருவருமே அரைசதம் கடந்து ஆடிவருகின்றனர். நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை பெங்கால் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்துள்ளது. 

Also Read - விசா தடை.. வெளிநாட்டு வீரர்களுக்கு பாதிப்பு..? ஐபிஎல்லுக்கு ஆப்பு..?

சுதீப் சட்டர்ஜி 77 ரன்களுடனும் ரிதிமான் சஹா 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அரையிறுதியில் சதமடித்த மஜூம்தர் இன்னும் களத்திற்கு வரவில்லை. அவரும் சிறந்த வீரர் என்பதால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். எனவே சவுராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் பாணியிலேயே பதிலடி கொடுத்துவரும் பெங்கால் அணி, முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிராவை விட அதிக ஸ்கோரை அடிப்பதில் உறுதியாகவுள்ளது.