இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. பார்வையாளர்கள் இல்லாமல் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனிலும் இரண்டாவது போட்டி மான்செஸ்டரிலும் நடந்தது. 

முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றன.  எனவே டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்தது. 

கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும். தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி டெஸ்ட் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அந்த போட்டியில் இங்கிலாந்தின் மேட்ச் வின்னரும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸுக்கு ஓய்வளிக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரே பென் ஸ்டோக்ஸ் தான். இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை குவித்த பென் ஸ்டோக்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்ததால் தான் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்த முடிந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தக்கூடிய பென் ஸ்டோக்ஸை நீக்கிவிட்டால், இங்கிலாந்து அணிக்கு அது மிகப்பெரும் பாதிப்பாக அமையும். 

இங்கிலாந்து அணி, சுழற்சி முறையில் வீரர்களை ஆடவைத்துவருகிறது. முதல் போட்டியில் ஆடிய சீனியர் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சன், இரண்டாவது போட்டியில் ஆடவில்லை. ரூட், பிராட் ஆகியோர் முதல் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில், முதல் 2 போட்டிகளில் ஆடிய பென் ஸ்டோக்ஸுக்கு கடைசி போட்டியில் ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த வீரர். முடிந்தவரை அவரை ஆடவைக்கவே விரும்புகிறோம். ஆனால் அவருக்கு ஓய்வும் அளிக்க வேண்டும். அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், கடைசி போட்டியில் ஆடுவார் என்று சில்வர்வுட் தெரிவித்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லையென்றால், அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.