பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 20 பந்தில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷதாப் கான் அதிரடியாக ஆடி 25 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களை விளாசினார். 

காலின் இங்ராம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களை விளாச, இஸ்லாமாபாத் அணி 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் வாட்சன் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த ராய், கரெக்ட்டாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த அஹமத் ஷேஷாத் மற்றும் ஆசாம் கான் ஆகியோர் சரியாக ஆடவில்லை. 

கேப்டன் சர்ஃபராஸ் அகமது 20 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த பென் கட்டிங் தான் இந்த போட்டியின் நாயகனே. சர்ஃபராஸ் அகமது அவுட்டாகும்போது, குவெட்டா அணியின் ஸ்கோர், 15.1 ஓவரில் 133 ரன்கள். எனவே எஞ்சிய 29 பந்தில் 56 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்படியான சூழலில் களத்திற்கு வந்த பென் கட்டிங், அதிரடியாக ஆடி ஃபினிஷிங் பணியை செவ்வனே செய்தார். வெறும் 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களை குவித்து, கடைசி ஓவரின் 4வது பந்தில் வெற்றியை தேடிக்கொடுத்தார். 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

 

Also Read - கேகேஆர் அணி வீரர் ஐபிஎல்லில் ஆட தடை.. பிசிசிஐ அதிரடி

பவுலிங்கில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி 17 பந்தில் 42 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பென் கட்டிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2018 மற்றும் 2019 ஆகிய கடந்த 2 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய பென் கட்டிங்கை மும்பை அணி இந்த சீசனில் கழட்டிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.