வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாளையொட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்துகிறது. 

இந்த போட்டியில் கலந்துகொண்டு ஆசியா லெவன் அணியில் ஆட இந்திய வீரர்களை அனுப்ப வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

4 இந்திய வீரர்களை இந்த போட்டியில் ஆட பிசிசிஐ தீர்மானித்துள்ளது. ஆனால் அந்த வீரர்கள் யார் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. விராட் கோலி, ஷிகர் தவான், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் ஆசியா லெவன் அணியில் ஆடுவார்கள் என்று பேசப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து பேசிய கங்குலி, இந்திய வீரர்கள் அதில் ஆடுவார்கள். அதுகுறித்து பேச்சுவார்த்தை இன்னும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் நடந்துகொண்டிருக்கிறது. எந்தெந்த வீரர்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கங்குலி தெரிவித்தார். 

இன்னும் எந்தெந்த வீரர்கள் என்பது முடிவாவதற்குள், விராட் கோலி, தவான், ஷமி, குல்தீப் என்ற தகவல் பரவிவருகிறது.