கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டன. ஐபிஎல் உட்பட அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல், கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருவதால், ஐபிஎல் குறித்த ரசிகர்களின் ஆர்வமும் கேள்வியும் எழுந்துள்ளது. 

அக்டோபர் 18ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் அதனால், அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்தன. 

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. அதேபோல ரசிகர்கள் இல்லாத காலி ஸ்டேடியத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. எனவே அவற்றிற்கான வாய்ப்புகள் உருவான பின்னர் தான் ஐபிஎல் நடத்தப்படும் என தெரிகிறது. 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு கங்குலி அளித்த பேட்டியில், ஐபிஎல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, வருகிற நாட்களில் என்ன நடக்குமென்று நம்மால் சொல்ல முடியாது. அதைப்பற்றி கணிப்பது மிகக்கடினம். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எப்போது இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

ஐபிஎல்லை நடத்துவதாக இருந்தால் எங்கு நடத்துவதே என்று தெரியவில்லை. கண்டிப்பாக இந்தியாவில் தான் நடத்த வேண்டும். ஆனால் அதற்கான பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். இப்போதைக்கு ஐபிஎல் குறித்து எதுவும் சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான சூழல் அமைவதை பொறுத்தே ஐபிஎல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனாவை தடுப்பதும், கொரோனாவிலிருந்து மக்களை காப்பதுமே முக்கியம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.