கோலி, ரோஹித் படுமோசமான ஃபார்ம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி தடாலடி
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய 2 முக்கியமான இந்திய வீரர்களின் மோசமான ஃபார்ம் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. விராட் கோலி மட்டுமல்லாது இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான ரோஹித் சர்மாவும் மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார்.
ஐபிஎல்லில் கோலி ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஆடிய 13 போட்டிகளில் வெறும் 236 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் கோலி. ரோஹித் சர்மா 12 போட்டிகளில் ஆடி 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே ஃபார்மில் இல்லாதது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் கவலையளிக்கிறது.
இவர்களுக்கு பலரும் பல அறிவுரைகளை வழங்கிவரும் நிலையில், ரோஹித் மற்றும் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய சௌரவ் கங்குலி, ரோஹித் மற்றும் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கல் சிறந்த வீரர்கள். உண்மையாகவே இருவரும் மிகப்பெரிய வீரர்கள். டி20 உலக கோப்பைக்கு இன்னும் நீண்டகாலம் இருக்கிறது. அதற்குள்ளாக அவர்கள் நன்றாக ஆட தொடங்கிவிடுவார்கள் என நான் நம்புகிறேன் என்று கங்குலி தெரிவித்தார்.