இந்திய அணியின் தற்போதைய தேர்வுக்குழு சந்தித்த விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் இதுவரை இருந்த எந்த தேர்வுக்குழுவும் சந்தித்ததில்லை, இனிமேல் வரப்போகும் எந்த தேர்வுக்குழுவும் சந்திக்குமா என்பதும் சந்தேகம். அந்தளவிற்கு எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கழுவி ஊற்றியுள்ளனர். 

உலக கோப்பை அணிக்கு தயாராகும் விதமாக 2017ம் ஆண்டிலிருந்து இந்த தேர்வுக்குழு செய்த வீரர்கள் தேர்வு, உலக கோப்பைக்கான அணி தேர்வு, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணி தேர்வு என அனைத்துமே சர்ச்சைதான்.

உலக கோப்பைக்கு நான்காம் வரிசை வீரரை தேடும் படலத்தில், எந்த வீரருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவில்லை. பின்னர் அம்பாதி ராயுடு நான்காம் வரிசைக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு திடீரென விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பையின் இடையே தவான் காயத்தால் வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதை அடுத்து மயன்க் அகர்வால் எடுக்கப்பட்டார். மயன்க் அகர்வால் அதற்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டதேயில்லை. திடீரென உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். அவர் ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது கிரிக்கெட் பார்க்கும் சின்ன பையனுக்கு கூட தெரியும். அப்படியிருக்கையில், மயன்க் அகர்வாலை எதற்கு எடுக்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் அவரை எடுத்தனர். ஆக மொத்தத்தில் கடைசிவரை ராயுடுவை மட்டும் எடுக்கவேயில்லை. அதேபோல மிடில் ஆர்டரில் இறங்க ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதே விமர்சனத்துக்குள்ளானது. 

இந்திய அணியின் சிக்கலாக இருக்கும் இடங்களுக்கு தீர்வு காணும் விதமாக பரிசோதிக்கப்படும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அதற்காகவே பல முன்னாள் வீரர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் தேர்வுக்குழு தன்னிச்சையாக செயல்படுவதில்லை என்றும் தேர்வாளர்களாக இருப்பவர்களே சர்வதேச கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக உலக கோப்பை அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

தற்போதைய தேர்வாளர்கள், அந்த பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் என்று கடுமையாக சாடியிருந்தார் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர். தேர்வாளர்களில் ஒருவர், உலக கோப்பை போட்டியின்போது விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு, அவரே டீ கொண்டு சென்று கொடுத்ததாக ஃபரோக் கூறியிருந்தார். 

இந்த தேர்வுக்குழுவை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோரும் கூட கருத்து தெரிவித்திருந்தனர். எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடியவடையவுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழுவை நியமிப்பது குறித்து, மும்பையில் நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவை மாற்றி புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதை உறுதி செய்தார். பதவிக்காலம் முடிந்துவிட்டால், அதன்பின்னர் தொடர முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த தேர்வுக்குழு சிறப்பாக செயல்பட்டது என்று தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் தேர்வுக்குழு தலைவராகவும் அவரது தலைமையில் தேர்வுக்குழு நியமிக்கப்படலாம் எனவும் ஒரு கருத்து உலா வந்த நிலையில், என்ன நடக்கிறது? யார் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படுகிறார்? அந்த குழுவில் உறுப்பினர்களாக யார் யார் நியமிக்கப்படுகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.