ஐபிஎல் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிகப்பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். இரண்டே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல்லை நடத்தவில்லையென்றால், பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 

அதனால் ஐபிஎல்லை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது பிசிசிஐ. ஆனால் எப்போது, எங்கே, எப்படி என்பதுதான் பெரும் கேள்விகளாக இருக்கின்றன. அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. அதனால் செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் மாதம் வரை ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஆனால் டி20 உலக கோப்பையை ஒத்திவைப்பது குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஐசிசியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது பிசிசிஐ.

இந்நிலையில், ஐபிஎல்லை அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் நடத்தும்பட்சத்தில், மும்பையில் மட்டுமே அனைத்து போட்டிகளும் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பையில் வான்கடே மைதானம் தவிர, டிஒய் பாட்டீல் மைதானம், பார்போர்ன் ஸ்டேடியம் ஆகியவையும் உள்ளதால் ஐபிஎல் 13வது சீசனை மும்பையில் மட்டுமே நடத்த வாய்ப்பிருப்பதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.