கொரோனாவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கி, இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் ஐம்பது சதவிகித பார்வையாளர்களுடன் போட்டிகள் நடந்துவருகின்றன. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் கொரோனாவிற்கு பின் இன்னும் எந்த கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவில்லை. ஐபிஎல் கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடத்தப்பட்டது. எனவே இந்தியாவில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்துவந்தது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியவுடன், இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வருகிறது. ஆரம்பத்தில் அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர், இந்தியாவில் தான் நடக்கும் என்றும், ஆனால் ஒரேயொரு நகரிலேயே அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இப்போது அனைத்து போட்டிகளும் வழக்கம்போல வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது. அகமதாபாத்தில் கட்டபட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவிருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.