ஐபிஎல் மினி ஏல தொகையில் மாற்றம் கொண்டு வரும் பிசிசிஐ: கொண்டாட்டத்தில் சிஎஸ்கே!
வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிக்குமான தொகையில் மாற்றம் செய்ய ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து அடுத்து நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு அணியிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இது ஒறு புறம் இருக்க, 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாத இறுதியில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், வரும் உலகக் கோப்பை தொடருக்கு பின்பு ஐபிஎல் மினி ஏலத்திற்கான தேதி மற்றும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த முறை மினி ஏலம் கொச்சியில் நடந்தது. இந்த முறை மும்பையில் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ரூ.43 ஆயிரம் சம்பளத்திற்கு தோனிக்கு வந்த வேலை வாய்ப்பு? எந்த கம்பெனி தெரியுமா?
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்திற்காக அணி நிர்வாகங்கள் செலவு செய்யவுள்ள தொகையில் கூடுதலாக ரூ.5 கோடி சேர்க்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏலத்தில் ரூ.95 கோடி வரையில் செலவு செய்ய அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தான் தற்போது கூடுதலாக ரூ.5 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மினி ஏலத்தில் சாம் கரண் அதிகபட்சமாக ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதே போல் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியது. தற்போது ஏலத் தொகை ரூ.5 கோடி வரையில் அதிகரிக்கப்படும் நிலையில், சென்னை அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அணியில் ரூ.6.50 கோடிக்கு அம்பதி ராயுடு வாங்கப்பட்டார். ஏற்கனவே இந்த சீசனுடன் அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரது தொகையுடன் இந்த ரூ.5 கோடி இணையும் பட்சத்தில் சென்னை அணியால் நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அதுமட்டுமின்றி விடுவிக்கப்படும் வீரர்களின் தொகையும் இதில் சேரும் போது இன்னும் கூடுதலாக சென்னை அணிக்கு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.