உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை வீரருக்காக நீண்ட தேடுதல் படலம் நடத்தியும் அதற்கு ஒரு தீர்வு காணப்படாமலேயே மிடில் ஆர்டர் சிக்கலுடனேயே உலக கோப்பைக்கு சென்றது. 

அரையிறுதி போட்டியை தவிர மற்ற போட்டிகளில் டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடியதால் மிடில் ஆர்டர் பிரச்னை வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அரையிறுதியில் டாப் ஆர்டர்கள் சொதப்பியதால் மிடில் ஆர்டர் சிக்கல் தெரியவந்தது. அந்த போட்டியில் தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. அதுவும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. 

உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அணியை மறு ஆய்வு செய்வதற்கான நிர்வாகக்குழு தலைமையிலான கூட்டமும் நடைபெறவுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தோல்விக்கு பிறகு பல தகவல்கள் வெளிவந்தன. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மற்ற சீனியர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள், ரோஹித் தலைமையில் தனி கேங்காக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. கேப்டன் கோலி தனது பேச்சை கேட்டு நடக்கக்கூடிய தனது விசுவாசிகளுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அணியின் சீனியர் வீரர் மற்றும் துணை கேப்டன் என்ற முறையில் ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் சாஸ்திரியும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளிவந்தது. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக செயல்பட்டு பல அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்துள்ளனர். அவை எதுவுமே பலனளிக்காமல் போனது. 

பெஸ்ட் பிளேயிங் லெவனுடன் ஆடுவது முக்கியம் என்று கருதாமல் தனது விசுவாசிகளை கேப்டன் கோலி எப்படி அணியில் எடுக்கிறாரோ, அதே தவறான விஷயத்தைத்தான் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்கும் போதே, வெளிநாட்டு தொடர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையும் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணையும், கிரிக்கெட் ஆலோசனை குழு(கங்குலி, சச்சின், லட்சுமணன்) பரிந்துரைத்தது. ஆனால் டிராவிட் என்ற ஜாம்பவானை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனக்கு நெருங்கியவரும், பெரியளவில் சர்வதேச போட்டிகளில் ஆடாதவருமான சஞ்சய் பங்காரை பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருணை பவுலிங் பயிற்சியாளராகவும் கேட்டு பெற்றுக்கொண்டார் சாஸ்திரி. 

ஆனால் அணி நிர்வாகத்தால் கடைசி வரை நான்காம் வரிசை வீரரை கண்டேபிடிக்க முடியவில்லை. அதன் விளைவு, அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் பதவிக்காக விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த முறையை போல இந்த முறை பயிற்சியாளர் தேர்வில், கேப்டன் என்றமுறையில் கோலி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. கேப்டன் கோலியிடம் எந்தவிதமான கருத்தும் கேட்கப்பட வாய்ப்பில்லை. முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விவகாரத்தில் கோலியின் கருத்து எடுத்துக்கொள்ளப்பட்டதை போல இந்த முறை நடக்காது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

ரவி சாஸ்திரிக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்தார். அனில் கும்ப்ளேவிற்கும் விராட் கோலிக்கு ஒத்துவரவில்லை. அதனால் கும்ப்ளேவை ஓரங்கட்டுவதில் கோலி குறியாக இருந்தார். கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிந்தபிறகு, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் சமயத்தில் ரவி சாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்து அவரை பயிற்சியாளராக நியமிக்க கோலி கேட்டுக்கொண்டதை அடுத்து சாஸ்திரி நியமிக்கப்பட்டார். தற்போது இவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டது, இவர்களால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சிறந்த அணியை கட்டமைக்க முடியாததும் அப்பட்டமாக தெரிந்துவிட்டதால், இந்த முறை கோலியின் கருத்து கேட்கப்படமாட்டாது என்றும் அவர் எதுவும் சொல்ல முடியாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.