ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஒன்றை பிசிசிஐ சற்றும் யோசிக்காமல் மறுத்துவிட்டது. 

ஆஃப்கானிஸ்தான் அணி அதிவேகமாக வளர்ந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் கூட சிறப்பாக ஆடியது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியது.

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பிசிசிஐ நிறைய பங்களிப்பு செய்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர்களை டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கி, அந்த மைதானத்தை ஆஃப்கானிஸ்தான் அணி சொந்த மைதானமாக பயன்படுத்த அனுமதி வழங்கியது. 

ஆஃப்கானிஸ்தான் அணி டேராடூன் மைதானத்தை சொந்த மைதானமாக பயன்படுத்திவருகிறது. உலக கோப்பைக்கு பின்னர் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட குல்பாதின் நைப் அதிரடியாக நீக்கப்பட்டு, மூன்றுவிதமான அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், பிசிசிஐ இந்தியாவில் நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அது இந்தியாவில் உள்ள இளம் வீரர்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதாலும் அவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதமாக அமையும் என்பதாலும் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது பிசிசிஐ.