IND vs AUS: கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உனக்கு இடம் இல்ல..! மறைமுகமாக சொன்ன பிசிசிஐ
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கேஎல் ராகுலுக்கு இடம் இல்லை என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத்தில் நடக்கின்றன.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் படுமோசமாக சொதப்பினார். கடைசியாக ஆடிய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் கேஎல் ராகுலை தொடக்க வீரராக இறக்கியதே விமர்சனத்துக்குள்ளானது.
IND vs AUS: ஆஸி., க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! ஹர்திக் பாண்டியா கேப்டன்
தன் மீதான விமர்சனங்களுக்கு உரமூட்டும் வகையில், முதல் டெஸ்ட்டில் 20 ரன் மட்டுமே அடித்த நிலையில், 2வது டெஸ்ட்டிலும் 17 மற்றும் 1 ரன் அடித்து சொதப்பினார்.
ராகுல் தொடர்ச்சியாக சொதப்பினாலும், அவருக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிப்பது விமர்சனத்துக்குள்ளானது. இந்திய அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்தன. டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுலை பென்ச்சில் உட்காரவைக்கமுடியாது என்பதால் அவரை ஆடும் லெவனில் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் துணை கேப்டனாக செயல்பட்ட ராகுல், துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டது. இன்றுதான் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன்சியிலிருந்து ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, கடைசி 2 டெஸ்ட்டில் அவருக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் இல்லை என்பதையே உணர்த்துகிறது. எனவே கடைசி 2 டெஸ்ட்டில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக ஆடுவார்.
இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷுப்மன் கில், புஜாரா, கோலி, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத்.