ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 17 வயதான இளம் வீரர் ரஷீக் சலாம். ஃபாஸ்ட் பவுலரான இவரை கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மூன்றாவது வீரர் ரஷீக் சலாம். பர்வேஸ் ரசூல், மன்சூர் தர் ஆகியோருக்கு அடுத்து ஐபிஎல்லில் இடம்பெற்ற மூன்றாவது வீரர் ரஷீக் சலாம் தான். 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட அவருக்கு பெரிதாக வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். ஆனால் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாகவே வீசினார். 

இளம் வீரரான ரஷீக் சலாம் கடும் சிக்கலில் மாட்டியுள்ளார். தவறான ஆவணங்களை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது பிசிசிஐ. 

பள்ளி ஆவணங்களும் கிரிக்கெட் வாரியத்திடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களும் வெவ்வேறாக இருப்பதால் வயது குறித்து தவறான தகவலை அளித்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது பிசிசிஐ. 

அண்டர் 19 அணியில் இடம்பெற்றிருந்த அவர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடக்க உள்ள முத்தரப்பு அண்டர் 19 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர், அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நல்ல பவுலராக ஜொலிக்கும் தகுதியிருந்த ரஷீக் சலாம், இப்படியொரு சிக்கலில் மாட்டி தடைபெற்றுள்ளார். இது அவரது எதிர்காலத்திற்கு தடையாக அமைந்துள்ளது.