இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான ரெய்னாவும் நேற்று முன் தினம் திடீரென அடுத்தடுத்து ஓய்வு அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

தோனியை பொறுத்தமட்டில் இது எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். தோனி அதிகாரப்பூர்வமாக மட்டுமே தனது அறிவிப்பை வெளியிட்டாரே தவிர, அவருக்கு மீண்டும் அணியில் இடமில்லை என்பது அவருக்கும் தெரிந்ததே. அதனால் அவர் ஓய்வறிவித்ததில் ஆச்சரியமில்லை. அவர் இதுகுறித்து பிசிசிஐ-யிடம் தெரிவித்த பின்னரே ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அதனால் தோனி ஓய்வு அறிவித்ததும் பிசிசிஐயும் அதை ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டது.

 

ஆனால் 33 வயதே ஆன ரெய்னா, தோனியை தொடர்ந்து திடீரென ஓய்வு அறிவித்தது, அனைவரையுமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தோனியின் வழியில் ஓய்வு அறிவிப்பதாக ரெய்னா அறிவித்தது பேரதிர்ச்சிதான். வழக்கமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிக்கும் முன்பாக, அதுகுறித்து பிசிசிஐக்கு தெரியப்படுத்தி, ஆலோசித்துவிட்டுத்தான் ஓய்வு பெறுவார்கள். ஆனால் ரெய்னா உணர்ச்சிப்பூர்வமாக திடீரென இந்த முடிவை எடுத்ததால், முன்கூட்டியே பிசிசிஐக்கு தெரியப்படுத்தமுடியாமல் போயிற்று. அதனால் முதலில், சனிக்கிழமையே டுவிட்டரில் பதிவிட்டுவிட்ட ரெய்னா, நேற்றுதான் பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ரெய்னாவின் கடிதம் கிடைத்ததையடுத்து, அவரது ஓய்வை ஏற்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ரெய்னா முதலில் பொதுவெளியில் ஓய்வை அறிவித்துவிட்டு, பின்னர் தான் பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியதை சுட்டிக்காட்டி, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ரெய்னாவின் ஓய்வு குறித்த பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்ட அறிவிப்பில், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு வலுசேர்த்ததை சுட்டிக்காட்டியுள்ள கங்குலி, அவரது கேப்டன்சியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்தில் ஒருநாள், டி20 தொடர்களை இந்திய அணி வென்றதையும் சுட்டிக்காட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் ரெய்னா இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை மெச்சியதோடு, அவரது இரண்டாவது இன்னிங்ஸூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதிரடியான பேட்டிங், அசத்தலான ஃபீல்டிங் என இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 2011 உலக கோப்பையில் ரெய்னாவின் பங்களிப்பு முக்கியமானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் யுவராஜ் சிங்குடன் இணைந்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார். நாக் அவுட் போட்டிகளின் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு ஆடக்கூடியவர் ரெய்னா. 

இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 768 ரன்கள் அடித்துள்ளார். 226 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ரெய்னா, 5 சதம், 36 அரைசதங்களுடன் 5615 ரன்களை குவித்துள்ளார். 78 டி20 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 1605 ரன்கள் அடித்துள்ளார்.