தோனி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகிய மூன்று விதத்தில் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்காற்றி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் தனது முத்திரையை பதித்து தனக்கென தனி இடம் பிடித்தார் தோனி. 

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி மொத்தம் 195 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன்மூலம் அதிகமான ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். தோனியை விட, மார்க் பவுச்சர் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள். ஆனால் ஸ்டம்பிங்கை பொறுத்தமட்டில் மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட்டை எல்லாம் தூக்கியடித்து, அதிகமான ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே கொண்டுள்ளார். அதற்கு காரணம் அவரது வேகமான ஆக்‌ஷனும், சமயோசித புத்தியும்தான்.

இந்திய அணி பல நேரங்களில் எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் திணறியபோது, தனது மின்னல்வேக ஸ்டம்பிங்கால் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தோனி. 

தோனியின் மின்னல்வேக ஸ்டம்பிங்ஸ், அணிக்கு வெற்றிகளையும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்த நிலையில், அவரது சில அதிவேக ஸ்டம்பிங், தேர்டு அம்பயரையே திணறவைத்துள்ளது. தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் கூட காலிதான்.

தோனியின் அதிவேக ஸ்டம்பிங் என்றால், 2019ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லரை செய்த ஸ்டம்பிங் தான். கேதர் ஜாதவ் வீசிய ஸ்பின் பவுலிங்கை ஃப்ரண்ட்ஃபூட்டில் ஆடியபோது, பேலன்ஸ் மிஸ்ஸாகி, ஒரு காலை லேசாக தூக்கிவத்தார் டெய்லர். காலைத்தூக்கி மீண்டும் ஊன்றுவதற்கு இடையேயான மிகக்குறைந்த இடைவெளியில் மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஸ்டம்பிங் செய்தார் தோனி. 

இந்த ஸ்டம்பிங்கை மூன்றாவது அம்பயரை ஆய்வு செய்ய கள அம்பயர் பரிந்துரைத்ததை அடுத்து மூன்றாவது அம்பயர் அதை ஆய்வு செய்தார். மிகவும் நுணுக்கமான அந்த ஸ்டம்பிங் மூன்றாவது அம்பயரை உடனடியாக முடிவெடுக்க முடியாமல் செய்தது. நன்றாக ஸூம் செய்து பார்த்து நீண்ட நேர ஆய்விற்கு பிறகு அதை அவுட் என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். 

தோனியின் இந்த ஸ்டம்பிங் சமூக வலைதளங்களில் செம வைரலானது. கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அம்பயர்கள் என கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைவரையும் வியக்கவைத்தது அந்த ஸ்டம்பிங். அந்த ஸ்டம்பிங் வீடியோ வைரலான சமயத்தில் ரசிகர்கள் பல விதமான டுவீட்டுகளை பதிவிட்டுவந்தனர். அப்போது, ரசிகர் ஒருவரின் டுவீட்டிற்கு பதிலளித்திருந்த ஐசிசி, ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது தோனி என்றால், பேட்ஸ்மேன்கள் காலை தூக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று ஐசிசியே, தோனியை விதந்தோதி பதிவிட்டிருந்தது. 

தோனி இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும், சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்லிலும் பல அபாரமான ஸ்டம்பிங்ஸை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பிங்கில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்தவர் தோனி. தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் கன்னிவெடி மீது காலை வைத்த மாதிரி நிற்கவேண்டும்; தூக்கினால் காலி.