கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் இந்த சீசன் முழுவதும் அபாரமாக ஆடி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறிய ஷோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் அணியும் இறுதி போட்டியில் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரைடண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிரடியாக ஆடிய அவர்  22 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் களமிறங்கிய ஃபிலிப் சால்ட், ஷாய் ஹோப், ஷகிப் அல் ஹசன், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சோபிக்கவில்லை. முக்கியமான வீரர்களான இவர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதனால் அந்த அணி 15 ஓவரில் 108 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஜோனாதன் கார்ட்டர் காட்டடி அடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதோடு, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். வெறும் 27 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடிய கார்ட்டர், 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆஷ்லி நர்ஸும் 15 பந்துகளில் 19 ரன்களை அடித்தார். கார்ட்டரின் கடைசி நேர அதிரடியால் ட்ரைடண்ட்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்களை குவித்தது. 

172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் மட்டுமே 40 ரன்களுக்கு மேல் அடித்தார். அவர் 33 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. ஹெட்மயர், பூரான், கேப்டன் ஷோயப் மாலிக், ரூதர்ஃபோர்டு, ஷெபேர்டு என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரைடண்ட்ஸ் அணி, கோப்பையை வென்றது.