டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானிடம் படுமோசமாக தோற்றுள்ளது வங்கதேச அணி. 

கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, அதற்கடுத்து அயர்லாந்துக்கு எதிராக ஆடிய போட்டியில் வென்றது. 

வெறும் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடிய அனுபவம் கொண்ட ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 224 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கடைசி நாள் ஆட்டத்தில் முக்கால்வாசிக்கும் மேலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டபோதும், வெறும் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்துவிடாமல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆல் அவுட்டானது வங்கதேசம். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோற்றதன் மூலம் மோசமான சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளது வங்கதேச அணி. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்றதன்மூலம் 10 அணிகளிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்ற முதல் அணி என்ற மோசமான சாதனையை வங்கதேச அணி பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அனைத்து அணிகளுக்கு எதிரான முதல் போட்டியிலும் தோற்ற அணி வங்கதேசம் தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 2 வெற்றிகளை விரைவில் பெற்ற அணிகளின் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலிய அணியுடன் பகிர்ந்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. முதல் 3 போட்டிகளிலேயே இரண்டு வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை ஆஃப்கானிஸ்தான் பகிர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலிலும் கடைசி இடத்தில் இருப்பது வங்கதேசம் தான். 60வது டெஸ்ட் போட்டியில் தான் வங்கதேச அணி, இரண்டாவது வெற்றியையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.