Asianet News TamilAsianet News Tamil

#BANvsSL முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
 

bangladesh beat sri lanka in first odi
Author
Dhaka, First Published May 23, 2021, 9:19 PM IST

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி இன்று தாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான தமீம் இக்பால் சிறப்பாக ஆட, சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் 15 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின்னர் இக்பாலுடன் ஜோடி சேர்ந்த சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம், அபாரமாக ஆட, இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது. அரைசதம் அடித்த தமீம் இக்பால், 52 ரன்னில் ஆட்டமிழக்க, முகமது மிதுனும் டக் அவுட்டாக, அதன்பின்னர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

அரைசதம் அடித்த ரஹீம் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், 84 ரன்னில் ஆட்டமிழந்து சத வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லாவும் அரைசதம் அடித்தார். மஹ்மதுல்லா 54 ரன்கள் அடிக்க, டெத் ஓவரில் அடித்து ஆடி அஃபிஃப் ஹுசைன் தன் பங்கிற்கு 27 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் வங்கதேச அணி 257 ரன்கள் அடித்து, 258 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது.

258 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா(21) மற்றும் கேப்டன் குசால் பெரேரா(30) ஆகிய இருவரும் ஓரளவிற்கு ஆடிவிட்டு சென்றனர். ஆனால் அதன்பின்னர் நிசாங்கா(8), குசால் மெண்டிஸ்(24), தனஞ்செயா டி சில்வா(9), ஆஷென் பண்டாரா(3), ஷனாகா(14) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 34 ஓவரில் 149 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

8ம் வரிசையில் இறங்கிய ஹசரங்கா, அதன்பின்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஹசரங்கா 60 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, 48.1 ஓவரில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. வங்கதேச அணி சார்பில் மெஹிடி ஹசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios