Asianet News TamilAsianet News Tamil

பப்புவா நியூ கினி அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றது வங்கதேசம்..!

பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேச அணி.
 

bangladesh beat papua new guinea and qualifies to supar 12 round in t20 world cup
Author
Al-Amerat, First Published Oct 21, 2021, 7:23 PM IST

டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய தகுதிச்சுற்று போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினியை எதிர்கொண்ட வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் ஷகிப் அல் ஹசனும் லிட்டன் தாஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகிவந்த நிலையில், லிட்டன் தாஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் 5 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து நன்றாக ஆடிவந்த மற்றொரு சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் மஹ்மதுல்லா, பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் ஆட்டமிழந்தார். 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்களுக்கு மஹ்மதுல்லா ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி சிறப்பாக முடித்துக்கொடுத்தார் சைஃபுதின். 20 ஓவரில் 181 ரன்களை குவித்த வங்கதேச அணி, 182 ரன்கள் என்ற கடின இலக்கை பப்புவா நியூ கினிக்கு நிர்ணயித்தது.

182 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பப்புவா நியூ கினி அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. 29 ரன்களுக்கே அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் 8ம் வரிசையில் இறங்கிய விக்கெட் கீப்பர் கிப்லின் டோரிகா அதிரடியாக ஆடி 34 பந்தில் 46 ரன்கள் அடித்தார். ஆனால் மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க, 97 ரன்களுக்கே ஆல் அவுட்டானது பப்புவா நியூ கினி அணி. 

இதையடுத்து 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி 4 புள்ளிகளை பெற்றதுடன், அதன் நெட் ரன்ரேட் அபரிமிதமாக உயர்ந்ததால், அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. வங்கதேச அணி இடம்பெற்றுள்ள அதே க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் போட்டியின் முடிவு, வங்கதேசத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios