ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் நடந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது.

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. தாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

வங்கதேச அணியில், ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடி, வங்கதேச அணி தொடரை வெல்ல காரணமாக திகழ்ந்ததுடன், தொடர்நாயகன் விருதையும் வென்ற லிட்டன் தாஸ் தான், முதல் டி20 போட்டியிலும் அபாரமாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த லிட்டன் தாஸ், 44 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 60 ரன்களை குவித்தார்.

லிட்டன் தாஸின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது வங்கதேச அணி. 156 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.

ஆஃப்கானிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர். நஜிபுல்லா ஜட்ரான் அதிகபட்சமாக 27 ரன்கள் அடித்தார். கேப்டன் முகமது நபி 16 ரன்களும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 20 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 17.4 ஓவரில் வெறும் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஃப்கானிஸ்தான் அணி.

இதையடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வங்கதேச அணிக்காக அபாரமாக பந்துவீசிய நசும் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.