பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திற்கு ஆதரவாளரான கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்க, பகலிரவு ஆட்டங்கள் வழிவகுக்கும் என நம்புகிறார். ஏனெனில் ரசிகர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலங்கள் ஆகியவற்றிற்கு விடுப்பு எடுத்து டெஸ்ட் போட்டியை காண வர இயலாது. எனவே பகலிரவு ஆட்டங்களாக நடத்தினால், ரசிகர்கள் வருவார்கள் என்று கங்குலி, பிசிசிஐ தலைவரானதும் தெரிவித்திருந்தார். 

பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதில் ஆர்வமாக இருந்த கங்குலி, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். அடுத்து நடக்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான போட்டியையே பகலிரவு ஆட்டமாக நடத்த முடிவெடுத்த கங்குலி, இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பேசி, அவரது ஒப்புதலையும் பெற்றார். அதன்பின்னர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இந்த விஷயத்தை தெரிவித்தார். 

இந்தியா - வங்கதேசம் இடையே நவம்பர் 22ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக நடத்தலாம் என்ற திட்டத்தை வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசனிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவரிடம் பேசியதாகவும் அவருக்கு அதில் உடன்பாடு இருப்பதாகவும் வீரர்களிடம் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக நஸ்முல் கூறியதாக கங்குலி தெரிவித்தார். மேலும் கொல்கத்தா டெஸ்ட் கண்டிப்பாக பகலிரவு ஆட்டமாக நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

வங்கதேச கிரிக்கெட் வாரியம் விரைவில் தனது முடிவை அறிவித்துவிடும் என திங்கட்கிழமை கங்குலி தெரிவித்திருந்த நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக்கொண்டது. இதையடுத்து கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. அந்த போட்டியை நடத்திய பெருமை ஈடன் கார்டனுக்கு கிடைக்கப்போகிறது.