ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான நேற்று, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இங்கிலாந்து அணியில் பர்ன்ஸும் பேர்ஸ்டோவும் மட்டுமே அரைசதம் அடித்தனர். அவர்களும் அரைசதத்துக்கு பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ராய், ரூட், ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து அணி 77.1 ஓவரில் 258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் 3 ரன்களில் வெளியேற, பான்கிராஃப்ட்டுடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் பர்ன்ஸ் 53 ரன்களில் கம்மின்ஸின் பந்தில் பான்கிராஃப்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பான்கிராஃப்ட் பிடித்த அந்த கேட்ச் அபாரமானது. பேட்ஸ்மேனுக்கு மிகவும் க்ளோசாக ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங் நின்ற பான்கிராஃப்ட், பர்ன்ஸ் அடித்த பந்தை அபாரமாக ஒற்றை கையில் கேட்ச் செய்தார். ஸ்பின் பவுலிங்கில் இதுபோன்ற கேட்ச்சை பிடிப்பது எளிது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கில் இதுபோன்ற கேட்ச்சை பிடிப்பது மிக மிக கடினம். ஆனால் விரைவாக ரியாக்ட் செய்து அந்த கேட்ச்சை அபாரமாக பிடித்தார் பான்கிராஃப்ட். அந்த வீடியோ இதோ...