உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, மிடில் ஆர்டரில் பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. 

இந்திய அணியின் 4ம் வரிசையை பூர்த்தி செய்ய பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான் அந்த இடத்தில் உறுதி செய்யப்பட்டார். 

ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். இந்திய அணியின் பெரிய பிரச்னையாகவும் பலவீனமாகவும் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல், உலக கோப்பையிலும் தொடர்ந்தது. அதன் எதிரொலி தான் இந்திய அணியின் தோல்வி. மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்பதை எதிரணிகளுக்கு வெளிப்படையாக தெரியும் அளவிற்கு பலவீனமாக இருந்தது. 

2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் தகுதியான சரியான மிடில் ஆர்டர் வீரர்களை கண்டறிய முடியவில்லை. அதன் எதிரொலியாக, அரையிறுதியில் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சரியாக ஆடாததால் தோல்வியை தழுவ நேரிட்டது. டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடியதால் லீக் சுற்றில் வெற்றிகளை குவித்தது இந்திய அணி. அரையிறுதி ஒரேயொரு போட்டியில் டாப் ஆர்டர்கள் சொதப்ப, இந்திய அணியின் உண்மை முகம் தெரியவந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும்போது கைகொடுக்க வேண்டிய மிடில் ஆர்டர்கள், தங்கள் பங்கிற்கு அவர்களும் சொதப்பினர். அதற்கு சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படாதது தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

அதைத்தான் தமிழக வீரர் பத்ரிநாத்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பத்ரிநாத், உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் ஆடியிருக்க வேண்டும். உலக கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு போதிய கால அவகாசம் இருந்தும் தேர்வு முறையில் தவறு செய்துவிட்டனர். அணி தேர்வில் நடந்த தவறுதான் அரையிறுதியில் தோல்வியை பெற்றுத்தந்துவிட்டது. இங்கிலாந்து மைதானங்கள் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பது தெரிந்தும் கூட அதற்கேற்றவாறு திட்டமிடப்படவில்லை. இனியாவது அணி வீரர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.