ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஜோ பர்ன்ஸும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வார்னரும் பர்ன்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 222 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். பர்ன்ஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

வார்னர் 154 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. ஆனால் வழக்கம்போலவே இந்த போட்டியிலும் அபாரமாக ஆடிய மார்னஸ் லபுஷேன், 185 ரன்களை குவித்து 15 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். மேத்யூ வேட் தன் பங்கிற்கு 60 ரன்கள் சேர்த்து கொடுத்தார். லபுஷேன் ஆட்டமிழந்த பிறகு, கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. 

340 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், மறுபடியும் சொதப்பினர். தொடக்க வீரரும் கேப்டனுமான அசார் அலி 5 ரன்களிலும் ஹாரிஸ் சொஹைல் 8 ரன்களிலும் ஆசாத் ஷாஃபிக் ரன்னே எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

25 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மசூத், தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த இஃப்டிகார் அகமதுவும் ரன்னே எடுக்காமல் நடையை கட்டினார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். பாபர் அசாமின் உண்மையான திறமை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படவில்லை என்ற ஏக்கம் இருந்தவர்களுக்கு இந்த போட்டியில் அந்த ஏக்கத்தை போக்கினார் பாபர் அசாம். 

நிதானமாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் ஆடிய பாபர் அசாம் சதமடித்து அசத்தினார். பாபர் அசாம் சதமடிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவரும் முகமது ரிஸ்வானும் அரைசதம் கடந்துவிட்டார். பாபர் அசாமின் சதம், ரிஸ்வானின் பொறுப்பான பேட்டிங்கால், பாகிஸ்தான் அணி, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கோரை உயர்த்திவருவதோடு, இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீண்டுவருகிறது. 

பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 226 ஆக இருந்தபோது, ஆஸ்திரேலிய அணியை விட 114 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் நாதன் லயன். பாபர் அசாம் 104 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஸ்வானுடன் யாசிர் ஷா ஜோடி சேர்ந்துள்ளார். 

பாபர் அசாம் சதத்திற்கு பின்னர், அணிக்கு தான் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக செய்யாமல் சென்றுவிட்டார். எனினும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா என்று பார்ப்போம். ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், லயன் ஆகியோரை வைத்து எளிதாக அந்த விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவதற்கான வாய்ப்புதான் அதிகமாகவுள்ளது.