ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்த பாபர் அசாம், மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். 

கராச்சி டெஸ்ட்:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான கராச்சி டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 556 ரன்களை அடித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியோ வெறும் 148 ரன்களுக்கு சுருண்டது. 408 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து கடைசி 2 நாள் ஆட்டத்தில் 506 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டியது பாகிஸ்தான் அணி. கிட்டத்தட்ட அசாத்தியமான அந்த இலக்கை பாகிஸ்தான் அணி அபாரமாக விரட்டியது. பாபர் அசாமின் அபார சதம் (196), ரிஸ்வானின் சதம்(104) மற்றும் அப்துல்லா ஷாஃபிக்கின் மிகச்சிறப்பான பேட்டிங் (96) ஆகியவற்றின் காரணமாக கடைசி நாள் முழுக்க பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை குவித்தது. அத்துடன் கடைசி நாள் ஆட்டம் முடிந்ததால் போட்டி டிராவானது.

பாபர் அசாம் சாதனை:

பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி 196 ரன்களை குவித்து, 4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டிருந்தாலும், பாபர் அசாமி ஆடிய பேட்டிங், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்தவைகளுள் ஒன்று.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கராச்சி டெஸ்ட்டின் 4வது இன்னிங்ஸில் 196 ரன்களை குவித்ததன் மூலம், டான் பிராட்மேன், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் ஆகிய லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்துள்ளார்.

இந்த 196 ரன்களை அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் டான் பிராட்மேன் (173*), 2ம் இடத்தில் விராட் கோலி (156), 3ம் இடத்தில் ரிக்கி பாண்டிங் (141) ஆகிய மூவரும் உள்ளனர். இந்த லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்களை குவித்த டெஸ்ட் ஜாம்பவான் பிரயன் லாராவே கடைசி இன்னிங்ஸில் 153 ரன்கள் தான் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.