ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதமடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கேப்டன் பாபர் அசாம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாஷிம் ஆம்லாவின் சத சாதனையை தகர்த்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பாபர் அசாமும் சேர்த்து மதிப்பிடப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சாதனைகளை படைத்துவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய பாபர் அசாம், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டியதில் ஹாஷிம் ஆம்லாவிற்கு அடுத்து 2ம் இடத்தை பிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதமடித்த பாபர் அசாம், ஹாஷிம் ஆம்லாவின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையை தகர்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய பாபர் அசாம் 83 பந்தில் 114 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 49 ஓவர்களில் 349 ரன்கள் என்ற கடின இலக்கை எட்டி பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 15வது சதம். 83 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 15 சதங்களை விளாசியுள்ள பாபர் அசாம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரு காலக்கட்டத்தில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களை விளாசி பழைய சாதனைகளையெல்லாம் தகர்த்து புதிய சாதனைகளை படைத்துவந்த நிலையில், இப்போது கோலியின் சாதனைகளை அசால்ட்டாக ஓவர்டேக் செய்து வருகிறார் பாபர் அசாம்.
ஹாஷிம் ஆம்லா 86 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 15 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், அந்த சாதனையை பாபர் அசாம் தகர்த்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15 சதங்களை அடித்த வீரர்கள்:
1. பாபர் அசாம் - 83 இன்னிங்ஸ்கள்
2. ஹாஷிம் ஆம்லா - 86 இன்னிங்ஸ்கள்
3. விராட் கோலி - 106 இன்னிங்ஸ்கள்
4. டேவிட் வார்னர் - 108 இன்னிங்ஸ்கள்
5. ஷிகர் தவான் - 108 இன்னிங்ஸ்கள்
