உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது. இவ்வாறு பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள், நல்ல பவுலர்கள் மட்டுமல்லாது தரமான பல ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அந்த அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

வார்னரும் ஸ்மித்தும் திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய அணி மேலும் வலுப்பெற்றுள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்து விளங்குகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போது எப்படி ஆடும் என்பதை கணிக்கவே முடியாது. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்கள் உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் வாய்ப்பு குறித்து பேசிய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாம் நல்ல அணியை பெற்றுள்ளோம்; சிறந்த பவுலர்களை பெற்றுள்ளோம். பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தால் இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும் என்பதெல்லாம் கிடையாது. ஏனென்றால், எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நம்மிடமும் தலைசிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி அருமையாக இருக்கிறது. இப்படியொரு சிறந்த அணியை வைத்துக்கொண்டு உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் நான் மிகுந்த அதிருப்தியடைந்து விடுவேன் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி மீதான அனைவரின் நம்பிக்கையே, அணி வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி ஆடி, கோப்பையை வெல்ல வேண்டும்.