ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. 

மன்கட் ரன் அவுட், அம்பயர்களின் கவனக்குறைவு, ஸ்லோ ஓவர் ரேட், களத்துக்குள் நுழைந்து தோனி அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தது என இந்த சீசனில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. 

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அக்ஸர் படேலின் ரன் அவுட் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தவான் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி பொறுப்பாக ஆடி ஆட்டத்தை பஞ்சாப்பிடமிருந்து பறித்தது. 

அரைசதம் அடித்து தவான் ஆட்டமிழந்தாலும் கடைசிவரை களத்தில் நின்று டெல்லி அணியை வெற்றி பெற செய்தார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். இக்கட்டான சூழலில் 19வது ஓவரை வீசிய பஞ்சாப் பவுலர் ஷமி, அந்த ஓவரில் கோலின் இங்கிராமை வீழ்த்தினார். அதற்கு அடுத்த பந்திலேயே அக்ஸர் படேலும் ரன் அவுட்டானார். ஒரு ரன்னை ஓடிவிட்டு இரண்டாவது ரன் திரும்பும்போது பவுலர் ஷமி மீது மோதியதால் அக்ஸர் படேலால் விரைவில் கிரீஸை தொடமுடியவில்லை. அதேநேரத்தில் ஷமியும் வேண்டுமென்றே அக்ஸர் படேலுக்கு குறுக்கே செல்லவில்லை. இந்த ரன் அவுட் குறித்த அதிருப்தியை அக்ஸர் படேல் வெளிப்படுத்தினாலும் வேறு வழியில்லை. அது அவுட்டுதான். அந்த வீடியோ இதோ..