இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல், தான் ஜொலித்ததன் சூட்சமத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது.
ஆடுகளத்தின் தன்மையை அருமையாக பயன்படுத்திக்கொண்ட இந்திய ஸ்பின்னர்கள் அஷ்வின், அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கும் சுருட்டினர். ஆனால் இங்கிலாந்து ஸ்பின்னர்களால் அதை செய்யமுடியவில்லை. அதற்கு இந்திய ஸ்பின்னர்கள் அளவிற்கு இங்கிலாந்து தரமான ஸ்பின்னர்களை பெற்றிருக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையாக ஆடினார்கள் என்பதும் ஒரு காரணம்.
முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, 2வது இன்னிங்ஸில், இந்த போட்டியில் அறிமுகமாகியிருந்த அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அறிமுக போட்டியிலேயே தான் ஜொலித்ததன் சூட்சமத்தை வெளியிட்டார் அக்ஸர் படேல். இதுகுறித்து பேசிய அக்ஸர் படேல், இது சிறந்த அனுபவம். அறிமுக போட்டியிலேயே, ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியது மிகவும் ஸ்பெஷல். ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது. இதில் தொடர்ச்சியாக வேகத்தை மாற்றி வீசியாக வேண்டும்; அதைத்தான் நான் செய்தேன். பேட்ஸ்மேன்களை தவறு செய்ய தூண்ட வேண்டும். முதல் நாளிலிருந்தே பந்து நன்றாக திரும்பியது. அதை பயன்படுத்தி டைட் லைனில் பந்துவீசி சாதித்தோம் என்று அக்ஸர் படேல் தெரிவித்தார்.
