வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான நான்காவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றது. நான்காவது போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோஸ்டான் சேஸ் அபாரமாக ஆடி 84 ரன்களை குவித்தார். தாமஸ் மற்றும் கோர்ட்டர் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். இவர்களின் சிறப்பான பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 50 ஓவர் முடிவில் 298 ரன்களை குவித்தது. 

299 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் கெய்க்வாட், அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய மூவரும் முறையே 20, 11 மற்றும் 20 ரன்களுக்கு வெளியேறினர். க்ருணல் பாண்டியா பொறுப்புடன் ஆடி 45 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மனீஷ் பாண்டே மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் ஏமாற்ற, போட்டி வெஸ்ட் இண்டீஸ் வசம் சென்றது. 

இந்திய அணி 31 ஓவர்களில் 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் அக்ஸர் படேலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 60 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்த அக்ஸர் படேல், அபாரமாக ஆடினார். அக்ஸர் படேல் ஓரளவிற்கு பேட்டிங் ஆடுவார் என்பது ஐபிஎல்லின் மூலம் தெரியும். ஆனால் இந்தளவிற்கு பேட்டிங் ஆடுவாரா என்பதை இந்த போட்டியை பார்த்தால் தெரிந்திருக்கும். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 63 பந்துகளில் 81 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 293 ரன்களை குவித்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் 3 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால் கடைசி போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றாலும் பிரச்னையில்லை. எனினும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்புடனேயே ஆடும்.