இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

செம ஃபார்மில் இருக்கும் ஃபின்ச் வழக்கம்போலவே அதிரடியாக தொடங்க, இந்த போட்டியிலும் வார்னர் மந்தமாகவே தொடங்கினார். இந்த உலக கோப்பை தொடங்கியதிலிருந்தே வார்னர், தனது வழக்கமான அதிரடியான பேட்டிங்கை ஆடவில்லை. நிதானமாகவே ஆடினார். ஆனால் பெரிய இன்னிங்ஸாக மாற்றினார். அதை இந்த போட்டியில் செய்ய தவறிவிட்டார். 

ஒருமுனையில் ஃபின்ச் அதிரடியாக ஆட, மறுமுனையில் மந்தமாக ஆடிய வார்னர், 48 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடிய கேப்டன் ஃபின்ச் அரைசதம் அடித்தார். வார்னரின் விக்கெட்டுக்கு பிறகு ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜாவும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆரோன் ஃபின்ச் 97 பந்துகளில்  8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். அதிரடியாக ஆடும் ஃபின்ச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் ஸ்மித் ஆடிவருகிறார். ஸ்மித் அரைசதத்தை நெருங்கிவிட்டார். 35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் அடித்துள்ளது. ஃபின்ச்சும் ஸ்மித்தும் ஆடிவருகின்றனர்.