ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டன. 

எஞ்சிய இரண்டு இடங்களில் ஒரு இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பிடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2 போட்டிகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் வென்றால் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடும். 

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றிருந்தால் மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்திருக்கும். ஆனால் அந்த போட்டியில் தோற்றதால் அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பும்ரா, மலிங்கா ஆகிய இருவருடன் ஹர்திக் பாண்டியாவும் ஃபாஸ்ட் பவுலிங்கை பார்த்துக்கொள்கிறார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், சில போட்டிகளில் ஆடி அபாரமாக பந்துவீசினார். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வெற்றிபெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ள நிலையில், பெஹ்ரெண்டோர்ஃப் உலக கோப்பை அணியில் இணைவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறார். 

உலக கோப்பைக்கான அணியில் பெஹ்ரெண்டோர்ஃப் இருப்பதால் உலக கோப்பை அணியில் இணைவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகி ஆஸ்திரேலியா செல்கிறார். வார்னர் நேற்று ஆடிய போட்டிதான் இந்த சீசனின் கடைசி போட்டி. ஸ்மித்தும் இன்றைய போட்டியுடன் செல்கிறார். இந்நிலையில், மும்பை வீரர் பெஹ்ரெண்டோர்ஃபும் விடைபெற்றுள்ளார். 

மும்பை அணி இறுதி போட்டியில் ஆடுவதை காண ஆவலாக உள்ளதாக டுவீட் செய்து விடைபெற்றுள்ளார் பெஹ்ரெண்டோர்ஃப்.