தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர மற்றும் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் தடை விதிக்கப்பட்டதால், ஆரோன் ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஓராண்டாக ஆடிவருகிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம், பெரியளவில் சொல்லும்படியாக இல்லை. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை முடிய உள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுகிறது. அந்த தொடரில் கடைசி 2 போட்டிகளில் ஸ்மித்தும் வார்னரும் ஆட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மார்ச் 29ம் தேதி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. அந்த போட்டியில் அவர்கள் இருவரும் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகை அந்த அணிக்கு உலக கோப்பைக்கு மிக முக்கியம். அந்த வகையில் அவர்களின் வருகையை ஆஸ்திரேலிய அணியே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், அவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக ஆடுவார்கள் என நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.