ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

முதல் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஆடுவதில் உள்ள சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்துவருகின்றனர். மூன்று ஒருநாள் போட்டிகளுமே பகலிரவு போட்டிகளாக நடக்கின்றன. 

இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவதாக பந்துவீசும் அணியின் பவுலர்களுக்கு பந்துவீசுவது கடும் சவாலாக இருக்கும். பனியின் காரணமாக பந்து பவுலர்களின் கைகளில் இருந்து வழுக்கும். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடும் சவாலான காரியம். அது இரண்டாவதாக பேட்டிங் ஆடும் பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவாக இருக்கும்.

இந்திய அணி ஏற்கனவே சேஸிங்கில் சிறந்த அணி. இதில் பனிப்பொழிவும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இந்திய அணி இரண்டாவது பேட்டிங் ஆடினால், கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிடும்.

எனவே பனிப்பொழிவு சவாலை எதிர்கொள்ளும் விதமாக ஆஸ்திரேலிய பவுலர்கள், சற்று ஈரமான பந்தை வீசி வலையில் தீவிர பயிற்சி மேற்கொள்கின்றனர். முதல் போட்டி நடக்கவுள்ள மும்பை வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய அணியின் இந்த தொடருக்கான ஹெட் கோச் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, இரவில் எந்த நேரத்தில் பனிப்பொழிவு தொடங்குகிறது? எந்தளவிற்கு பனிப்பொழிவு இருக்கிறது? என்பதையெல்லாம் ஆராய்ந்திருக்கிறார். அதற்கேற்ப, ஆஸ்திரேலிய பவுலர்கள் ஈரமான பந்தில் பந்துவீசி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.